'நவரச நாயகன்' என்ற பட்டத்திற்கு திரு. கமல் ஹாசன் மிகவும் பொருத்தமானவர் என்றாலும், என்னை பொறுத்தவரை திரு. டெல்லி கணேஷ் அவர்களும் இன்னொரு நாவரச நாயகனே! கமல் அவர்களுக்கே உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற நிலையில், கணேஷ் அவர்கள் அதிகம் பேசப்படாதது எனக்கு பெரிய ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை .
சிம்லா ஸ்பெஷல் ஆரம்பித்து, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், சிந்து பைரவி, அவ்வை ஷண்முகி என மிகப்பெரிய வெற்றி படங்கள் ஆகட்டும், எதிரி, ஆஹா, 'விஎத்னம் கோலோனி', தமிழன் என சிறிய படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் வரை, கணேஷ் அவர்களின் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட பரிமாணங்களை கண்டு ரசித்து இருக்கிறேன். எந்த படமாக இருந்தாலும் நான் அந்த கதாபாத்திரத்தில் லயித்து போய் இருக்கிறேனே தவிர, அங்கு கணேஷ் அவர்களை தனித்து கண்டது இல்லை. அந்த அளவுக்கு அவர் திறமை மிக்கவர்.
எனக்கு பொதுவாக ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிட்டு பார்ப்பது பிடிக்காத ஒரு விஷயம். ஆனாலும், சில சமயங்களில் இந்த ஒப்பீடு, சொல்ல வந்த கருத்தை எளிமையாக புரிய வைக்க உதவுமானால், அது தவறு இல்லை என்பது என்னுடைய சமாதானம். ரகுவரன் அவர்கள் என்றதும் உடனே நம் நினைக்கு வருவது அவருடைய அந்த மாறுபட்ட வசன உச்சரிப்பு தான், பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு ஒரு தனி பாணி, என்று பெரும்பாலான திறமையான நடிகர்கள் தங்களுக்கு என்று ஒரு பாணியிலேயே திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அதனாலேயே கூட அவர்களுக்கு, கணேஷ் அவர்களுக்கு கிடைக்காத ஒரு அங்கீகாரம் கிடைத்து இருக்கலாம்.